ரஜினி முருகன் படத்திற்கு பிறகு, தனது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி வைத்தார் சிவகார்த்திகேயன். மிகவும் பிரம்மாண்டமாக அடுத்த படமான ‘ரெமோ’விற்கு அடியெடுத்து வைத்தார் சிவகார்த்திகேயன். படத்திற்கு பூஜை போட்டது முதல் வெளிவரும் நாள் வரை இதன் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்து கிடந்தது.
இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்படுவதே வெற்றி என்ற இலக்கை அடைவதற்காக தான். அந்த வரிசையில் இப்படம் வெற்றிக் கனியை அடைந்ததா இல்லையா என்று இந்த விமர்சனம் மூலம் காணலாம்.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. சத்யம் திரையரங்கில் ஒரு நாயகனாக தனது புகைப்படமும் பெரிய பேனரில் வர வேண்டும் என்ற ஒரு குறிக்கோளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷை காண்கிறார் அவர். பார்த்த முதலே கீர்த்தி மேல் காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன், கீர்த்தி வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் என்று தெரியாமல்.
ஒரு கட்டத்தில் கீர்த்தி திருமணத்திற்கு நிச்சயமக்காப்பட்ட பெண் என்று தெரிகிறது சிவகார்த்திகேயனுக்கு. பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயன் பெண் வேடத்திற்கு மாற, அந்த சமயத்தில் உண்மையான பெண் தான் என்று கீர்த்தி சிவகார்த்திகேயனை எண்ண, இந்த சமயத்தை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த இக்கட்டான நிகழ்வை பிடித்துக் கொண்டு சிவகார்த்திகேயன் கீர்த்தியை அடைந்தாரா என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை தனக்கு உரித்தான கதாபாத்திரமாக மாற்றும் திறமை படைத்தவர் சிவகார்த்திகேயன். இந்த படத்திலும் அதேபோல் தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து கொடுத்திருக்கிறார் சிவா. நடிப்பு, நடனம், அழகு என சென்ற படத்தை விட இன்னும் சில மடங்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார்.
நர்ஸ் வேடத்திற்கு மாறும் தருணத்தில் ஆண்களே ஜொல்லு விடும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த நர்ஸ் வேடத்திற்கு அவரே குரலும் கொடுத்தது மேலும் சிறப்பு. கீர்த்தி மனதை கலைப்பதற்காக அவர் எடுக்கும்முயற்சிகள் அனைத்தும் காமெடி கலாட்டா சரவெடி தான்.
ஆக்ஷன் காட்சிகளிலும் முன்னேறியிருக்கிறார் சிவா. பத்து பேர் வந்தாலும் தூக்கி போட்டு பந்தாடும் அளவிற்கு. கடந்த படங்களை விட மிகவும் அழகாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பி சி ஸ்ரீராமின் கேமரா பல இடங்களில் துள்ளி விளையாடுகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருந்தது கூடுதல் சிறப்பு.
படத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும், வரும்போதெல்லாம் அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறார் யோகி பாபு. ‘ரெமோ’ ஆண் என்று தெரியாமல் அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் இடங்களில் யோகி பாபு கூடுதல் கலகலப்பூட்டுகிறார்.
சரண்யா பொன்வண்ணன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கே எஸ் ரவிக்குமார் என அனைவரும் கொடுத்த வேலைகளை மிகவும் நேர்த்தியாக்க செய்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை தேவையான இடங்களில் மட்டும் கொடுத்திருப்பது மகிழ்ச்சி.
கமலஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி’ படத்தின் இப்போதைய வெர்ஷன் போல மாற்றி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மாற்றி கொடுத்தாலும் அதை திரைக்கதையாக கொண்டு வரும் இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த தவறிவிட்டார் இயக்குனர்.
லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம் என கொஞ்சம் அதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். லாஜிக் எதுவும் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு கொண்டாட்டம் தான்.
’ரெமோ’ – சிவகார்த்திகேயனின் பயணத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மெமோ’…. பிரம்மாண்டத்திற்கு விளம்பரத்திற்கும் கொடுக்கும் ஒரு மெனக்கெடலை கொஞ்சம் கதையிலும் செலுத்துங்கள் வளரும் நாயகனே….

