தெருவில் குப்பை பொறுக்கி சம்பாதிக்கிறது ஒரு இளம் கூட்டம். அந்த கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறார் படத்தின் நாயகன் ஸ்ரீராம். தினமும் குப்பை பொறுக்கினால் மட்டுமே தன்னால் வாழ முடியும் என்ற நிலை ஸ்ரீராமிற்கு. குப்பத்து பெண்ணாக வருகிறார் ஆரா. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இப்படி சென்றிருக்கும் ஸ்ரீ ராமின் வாழ்க்கையில் 100 கோடி ரூபாய் அடங்கிய ஒரு பண மூட்டை கிடைக்கிறது.
அந்த பணம் பிரபல கோடீஸ்வரன் மதுசூதனின் வியாபாரத்தில் கிடைத்த கருப்பு பணம், இந்த பணத்தை மதுசூதனின் கையாளாக வரும் ராஜ சிம்மனிடம் கொடுத்து மறைத்து வைக்க சொல்கிறார். மறைத்து வைக்கப்பட்ட பணம் ஸ்ரீராமிடம் சிக்குகிறது. அந்த பணத்தை திருப்பி தந்தால் மட்டுமே ராஜ சிம்மனால் உயிர் வாழ முடியும் என்ற நிலை வர, பணத்தை தேடி அலைகின்றனர்.
அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து வருகிறார் ஸ்ரீ ராம். ஒரு கட்டத்தில் ஸ்ரீராமின் நண்பன் விபத்தில் சிக்க, சரியான நேரத்தில் அந்த பணத்தை கொடுக்க முடியாததால் நண்பன் இறந்துவிட, மற்ற நண்பர்களும் ஸ்ரீ ராமை விட்டு பிரிகின்றனர், அதிக பணம் வைத்திருந்ததால் ஆராவும் அவரை விட்டு பிரிகிறார்.
இதற்கு பின் ஸ்ரீ ராமின் நிலை என்ன??? அந்த பணம் யார் கையில் சிக்கியது??? ஆராவுடன் மீண்டும் ஸ்ரீ ராம் இணைந்தாரா.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஸ்ரீ ராம் இளம் காதல் படத்தில் மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குப்பத்து பெண்ணாக ஆரா அழகாக இருக்கிறார். குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கை தரத்தை மிகவும் அருமையாக கண் முன் வந்து நிறுத்துகிறார் இயக்குனர். கொடூர வில்லனாக வரும் ராஜ சிம்மன் மற்றும் மதுசூதன் கதைக்கு பொருந்தினாலும், கதாபாத்திரத்திற்கு சற்று விலகி நிற்கிறார்கள் இருவரும். யாருப்பா அது மதுசூதனுக்கு பக்கத்திலே ஒரு பொண்ணு..?? சலிப்பு..
க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் சண்டைக்காட்சிகள் கோலிசோடா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. சென்றாயன், நாசர் ஆகியோர் கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் கதை பல படங்களை சேர்த்து வைத்த கலவையாக தான் இருக்கிறது. பணம் கையில் கிடைத்ததும் ஸ்ரீ ராம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் செயற்கையாக தான் இருக்கிறது. ”பேராசை பெரு நஷ்டம்” இது ஒன்றை மட்டும் தெளிவாக காட்டுகிறது பைசா.