சிறிது காலமாக தமிழ் சினிமாவில் பேய்க் கதைகளின் ஆதிக்கம் சற்று தலை தூக்கி தான் திரிகிறது. அந்த வரிசையில் “ஜாக்சன் துரை” எந்த மாதிரியான கதையில் உருவாகியுள்ளது, பேய் படங்களின் வரிசையில் ஜாக்சன் துரை வெற்றி பெற்றதா இல்லையா என்று பார்த்து விடலாம்.
அயன்புரம் என்ற கிராமத்தில் ஒரு பயமுறுத்தும் ஒரு பங்களா. அந்த பங்களாவில் இரவு 9 மணி ஆனால் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், அதிகமான சத்தம் வருவதாகவும், கிராமத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. அந்த கிராமத்தில் உண்மையாகவே பேய் நடமாட்டம் இருக்கிறதா?? அல்லது மனிதர்கள் யாரும் செய்யும் வேலையா என்பதை கண்டறிய போலிஸ் அதிகாரியாக அந்த கிராமத்திற்கு வருகிறார் சிபிராஜ்.
அந்த கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகளாக வரும் பிந்து மாதவியை பார்த்ததும் சிபிராஜ்க்கு காதல் வர, நேராக சென்று அவர் தந்தையிடமே பெண் கேட்கிறார், அதே சமயத்தில் பிந்து மாதவி தனக்கு மட்டும் தான் சொந்தம் என தாய்மாமனாக வாழ்ந்து வரும் கருணாகரனும் பிந்து மாதவியின் தந்தையிடம் பெண் கேட்க, முடிவில் இருவருக்கும் ஒரு போட்டி ஒன்றை வைக்கிறார் அவர்.
இருவரும் அந்த பேய் பங்களாவில் சென்று 7 நாட்கள் தங்க வேண்டும், கடைசியாக யார் அந்த பங்களாவில் இருந்து உயிருடன் வருகிறார்களோ அவர்களுக்கு தான் என் பெண்ணை தருவேன் என பிந்து மாதவியின் தந்தை கூற, இருவரும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்…
கடைசியாக அந்த பங்களாவிற்குள் என்ன இருக்கிறது?? சிபிராஜ் பிந்து மாதவியை கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை…
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சிறிது இடைவெளிக்குப் பிறகு, சிபிராஜ் நடித்திருக்கும் படம் இது. மிக கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடிக் காட்சிகள். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் படத்திற்கு மிகப் பெரிய பலம், இருவரும் காட்சிகள் தோன்றிவிட்டாலே திரையரங்குகளில் சிரிப்பலைகள் அதிர வைக்கிறது.
அதிலும் கருணாகரன், அந்த குட்டிப்பேயிடம் மாட்டிக் கொண்டு செய்யும் அலப்பறைகள்… செம.. சத்யராஜ்ஜின் மிரட்டல் லுக் பயமுறுத்துகிறது. சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனது அழகால் கட்டி போட்டு விடுகிறார் பிந்து மாதவி.
பெரிதான திரைக்கதை இல்லை என்பதால் படம் சற்று பின் வாங்குகிறது. சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சற்று டல் அடித்தாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார், அதிலும் வில்லனுக்கான தீம், மொட்டை ராஜேந்திரனுக்கான தீம் என மிரட்டி எடுத்து விட்டார்.
ஒரு இடத்தில், ஒரு காட்சியை திரும்ப திரும்ப காண்பிப்பதால் சற்று அந்த இடத்தில் போர் அடித்து விடுகிறது. யுவராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை மிகவும் அருமையாக படமெடுத்திருக்கிறார்.
பேய்க் கதைகள் என்றாலே லாஜிக் வேண்டாம் என்று யாரும் கூறிவிட்டார்களா என்ன..??? கதையில் சற்று பலம் இருந்திருந்தால் இன்னும் நலமாயிருந்திருக்கும்.
ஜாக்சன் துரை – குடும்பங்கள் கொண்டாடும் காமெடி கலாட்டா..