தமிழ் சினிமாவுக்கு சாக்லேட் பாயாக அறிமுகமான பிரசன்னா, மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் வில்லனாக மாறினார். இப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் வில்லனாக நடித்த பிரசன்னா தற்போது அஜித் நடிக்கவிருக்கும் ‘தல57’ படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சமீபத்தில் பிரச்சன்னாவிடம் இதுகுறித்து படக்குழுவினர் பேசியதாக கூறப்படுகிறது. பிரசன்னா தற்போது தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார். அனேகமாக, ‘தல57’ படத்துக்காகக்கூட அவர் இந்த முயற்சியை மேற்கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் மற்றொரு வில்லனாக அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலாவுகிறது.
எதுவாக இருந்தாலும், முடிவில் படக்குழுவினர் இப்படத்தின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் படமாகவிருக்கிறது. பல்கேரியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து மொத்தம் 4 நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.