சிம்பு நடிக்கும் படம் என்றாலே நீண்டகாலத் தயாரிப்புதான் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, திட்டமிட்டபடி படம் வெளியாவதே கிடையாது. இதற்கு கௌதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படமும் விதிவிலக்கில்லை.
நீண்டநாட்களாக தயாராகி வரும் இந்தப்படம் சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் 'தள்ளிப்போகாதே...' பாடல் படமாக்கப்படாமல் இருந்தது. பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்தில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 'தள்ளிப்போகாதே....' பாடலுக்கான படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நடந்தேறியது.
இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் படம் நவம்பர் மாத இறுதியில், அதாவது 18 அல்லது 25ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.