Latest News

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்



மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்காரத்துரை என தன்னுடைய படங்களில் காமெடியை மட்டுமே வைத்து சுந்தர் சி க்கு போட்டியாக களம் இறங்கி அதில் வெற்றியுடன் பயணிப்பவர் இயக்குனர் எழில். தன்னுடைய படங்கள் அனைத்தும் நாட்டிற்கு நல்ல ஒரு கருத்தை கூறாவிட்டாலும் திரையரங்கில் இருக்கும் பார்வையாளர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து அனுப்பி வைப்பவர் எழில். அவரின் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கி வெளிவந்துள்ள படம் தான் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”. இந்த வெள்ளைக்காரன் என்ன பண்ணிருக்காரு என்று பார்த்து வரலாம்…
தனது ஊர் எம் எல் ஏ ரோபோ ஷங்கரின் வலது கையாக வருகிறார் விஷ்ணு. தனது மகளை எப்படியாவது போலீஸாக ஆக்க வேண்டும் என்று நிக்கி கல்ராணியின் தந்தை விஷ்ணுவிடம் பத்து லட்சத்தை கொடுக்கிறார். விஷ்ணுவும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எம்எல்ஏ விடம் கொடுத்து விடுகிறார்.
மறுபக்கம் எம்எல்ஏவின் தலைமையில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் விஷ்ணு. அதில் ஒரு ஜோடிக்கு மாப்பிள்ளை மட்டும் ஓடிப் போய்விட, வலுக்கட்டாயமாக 25வது ஜோடியாக சூரியை நிறுத்து விடுகிறார் விஷ்ணு, சூரியும் நகைக்காக ஆசைப்பட்டு புஷ்பா என்பவரை நாடக திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த நாடக திருமணத்தால் இன்னும் ஒரு மாதத்தில் தனது .மாமா மகளுடன் நடக்கவிருக்கும் திருமணம் நிற்கும் நிலைமைக்கு வர, நடந்தது நாடக திருமணம் தான் என நிரூபிக்க எம்எல்ஏ வை அழைக்க வருகிறார் சூரி. அதே சமயத்தில் பத்து லட்சம் பணத்தை நீதான் ஏமாற்றி வைத்துக் கொண்டாய் என நிக்கி கல்ராணி விஷ்ணுவின் மீது பாய, விஷ்ணு தான் அந்த பணத்தை வைக்கவில்லை எம்எல்ஏ விடம் கொடுத்துவிட்டதாகவும் அதை நிரூபிக்க எம்எல்ஏ ரோபோ சங்கரை பார்க்க வருகிறார் விஷால்.
அந்த சமயத்தில் ரோபோ சங்கர் தனது கட்சி அமைச்சரின் உடல்நிலை பற்றி விசாரிக்க செல்ல, அமைச்சரோ தனது பணம் 500 கோடியை பதுக்கி வைத்திருக்கும் இடத்தை ரோபோவிடம் சொல்லி விடுகிறார்.
அந்த பணம் எங்கே இருக்கிறது என அமைச்சரின் மச்சானாக வரும் ரவி மரியா ரோபோவை துரத்த, கார் விபத்துக்குள்ளாகி கோமா நிலைமைக்கு சென்று பத்து வயதிற்கு திரும்பி விடுகிறார் ரோபோ….
விஷ்ணு அந்த பணத்தை ஏமாற்றவில்லை என நிரூபித்து நிக்கியின் காதலில் ஜெயித்தாரா..??? புஷ்பாவுடன் நடந்தது நாடக திருமணம் தான் என சூரி நிரூபித்து தனது மாமா மகளை திருமணம் செய்து கொண்டாரா….??? 500 கோடி பணம் என்னவானது ???? ரோபோ பழைய நிலைக்கு திரும்பினாரா..?? என்பதை மிகவும் கலகலப்புடன் கூறியிருக்கிறார் இயக்குனர் எழில்..
விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படம். முதல் முறையாக காமெடி காட்சிகளில் அசத்தியிருக்கிறார் விஷ்ணு. நிக்கி கல்ராணி அழகு ராணி தான்.. அழகாக வருகிறார்… காதல், பாடல் என காதலர்களுக்கான பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள் விஷ்ணுவும், நிக்கியும்..
படத்தில் பெரிய அதகள பங்கு சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, சுவாமி நாதன், ரவி மரியாவின் அடியாட்கள் என படத்தில் வரும் அனைவரும் காமெடிக் காட்சிகளை அள்ளி தெளித்திருக்கிறார்கள். கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனைவரும் சிக்ஸராக அடித்து வெளுத்து கட்டுகிறார்கள். அதிலும் சூரி செல்லும் இடங்களில் எல்லாம் “ நீங்க புஷ்பா புருஷனா??” என அனைவரும் கேட்கும் போது திரையரங்குகளில் சிரிப்பலைகள் எகிறுகிறது.
ரோபோ சங்கர் பத்து வயதிற்கு திரும்பிய பிறகு அவர் அடிக்கும் அரட்டைகள் செம… அதிலும் கடைசி 15 நிமிட காட்சிகள் செம செம… சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்ற அளவிற்கு காமெடி காட்சிகள் அனைத்தும் அற்புதம்..
படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் காட்சிகள் மீறினாலும், காமெடி காட்சிகளால் சிரிக்க சிரிக்க வைத்து அந்த இடத்தை சரிசெய்து விட்டார்கள். சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் ஒகே… பின்னணி இசை கவனித்திருக்கலாம்.. சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா மூவரும் படத்திற்கு சரியான தேர்வு.. படத்தில் கருத்தோ, கதையோ பெரிதாக இல்லையென்றாலும் காமெடி என்ற ஒன்றிற்கா மட்டும் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..
நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக சிரித்து, சந்தோஷமாக பார்க்க வைத்த ஒரு படம்..
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – ஜெயிச்சுப்புட்டான்….
Back to Top

Recent Post

Gallery