ரஜினிகாந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் பணிவுமிக்கவர்; எளிமையானவர். தன் பணியில் அதீத ஈடுபாடுடைய அவர், கடுமையான உழைப்பாளி. அவரது கடின உழைப்பு, நம்ப முடியாத வகையில் உள்ளது. அவருடன் நடித்த அனுபவம், எனக்கு வரப்பிரசாதம். ரஜினியை விட, பெரிய நடிகர் யாரும் கிடையாது. என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய போது, ஆங்கிலத்தில் பேசினோம். அவரிடம், மராத்தி மொழி தெரியுமா என, கேட்டேன். அதையடுத்து, என்னுடன் அவர் மராத்தியில் பேசினார். அது, மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கபாலி படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சியை, இயக்குனர் கூறியபின், அதை, எனக்கு ஆங்கிலம் அல்லது மராத்தியில், ரஜினி மொழி பெயர்த்து சொன்னார்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.