இளைய தளபதி விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பிரபல இயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில் பொங்கல் விருந்தாக தைத்திங்களுக்கு, தமிழர் திருநாளுக்கு இரு தினங்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் படம் தான் "பைரவா". பி.நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் பேனரில் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.
ஒரு பிரபல தனியார் வங்கியிடம் கடன் வாங்கி விட்டு திருப்பி தராது, தகராறு செய்பவர்களிடமெல்லாம் தன் பாணியில் வசூல் வேட்டை நடத்தும் கலெக்ஷன் ஏஜென்ட் வேலை பார்க்கிறார் பைரவா - விஜய். வங்கி அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரா வீட்டு கல்யாணத்திற்காக செல்லும் விஜய்க்கும் அத்திருமணத்திற்காக வரும் திருநெல்வேலி மலர் விழி - கீர்த்தி சுரேஷுக்கும், இடையில் நட்பும், காதலும் ஒரு சேர ஏற்படுகிறது. அதே நேரம் மலர் விழி - கீர்த்தியை துரத்தும் ஒரு பெரும் ரவுடி கும்பலையும், மிகப் பெரும்சோகத்தையும், அதற்கு பின்னணியில் இருக்கும் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் தாதா ஜெகபதி பாபுவையும் எப்படி நையப்புடைக்கிறார்? எப்படி காதலில் வென்று கீர்த்தியின் சக மெடிக்கல் காலேஜ் நண்பர்களுக்கு நல்லது நடக்க காரணமாகிறார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வழக்கமான விஜய் பட பாணியிலேயே விடை அளிக்க முயன்றிருக்கிறது "பைரவா" படத்தின் கதையும், களமும்.
விஜய், பைரவாவாக வழக்கம் போலவே வெளுத்துகட்டியிருக்கிறார். "இப்ப நிறைய பேருகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... அது சொன்ன சொல்ல காப்பாத்துறது...." என்ற பன்ச் டயலாக்கை அடிக்கடி உச்சரித்து அதிரடி செய்வதில் தொடங்கி, கபாலியில் ரஜினி மகிழ்ச்சி என்றபடி மகிழ்ச்சியாக உலா வந்தது மாதிரி இதில் சிறப்பு, மிகச்சிறப்பு என்றபடி விஜய், ரஜினி ரூட்டை பின்பற்றுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். அதே மாதிரி வில்லன் ஜெகபதி பாபுவிடம் சென்னையில் இருந்தபடி போனில்,"கசாப்புக் கடையில ஆடு வெட்ட ஆரம்பிச்சு, காசுக்காக ஆளவெட்டி கல்லூரி ஆரம்பிச்சு, கல்வி தந்தை, கல்வி வள்ளல்லுன்னு உனக்கு நீயே பேரை போட்டுக்கிட்டு..." பண்ற கூத்தெல்லாம் தெரியும். என்ன உனக்கு யாருன்னு தெரியுமா.? எனக் கேட்டு நையாண்டி செய்வது வரை நச் சென்று ரசிகனை டச் செய்திருக்கிறார். யார் ரா யார் ரா.? இவன் ஊரைக் கேட்டா தெரியும்.. என்னும் பின்னணி ரிதம் மிரட்டல்.
திருநெல்வேலி மலர் விழியாக கீர்த்தி சுரேஷ் செம கச்சிதம். விஜய்யை கீர்த்தி சந்திக்கும் முதல் சந்திப்பு செம ரசனை. விஜய்யுடன் கீர்த்தியை பார்க்கும் ரவுடிகள், டிராபிக் போலீஸ்... உள்ளிட்ட எல்லோரும் அண்ணி, அண்ணி... என விஜய்யின் ஜோடியாக அழைக்க, டென்ஷன் ஆகும் கீர்த்தி சுரேஷ் ஒரு பொறுக்கி பூதமும், ஒரு போலீஸ் பூதமும்... சொன்னதால நான் அண்ணியும் கிடையாது, நீ அண்ணனும் கிடையாது... என குதிக்கும் இடங்கள் செம ஹாஸ்யம். கீர்த்தி செம திருப்தியாய் தன் நடிப்பை செய்திருக்கிறார் பூர்த்தி.
"நம்ம அப்பன் ஏழையா இருந்தா அது விதி... மாமனார் ஏழையா இருந்தா அது நமக்கு நாமே பண்ணிக்கிற சதி... அதனால பணக்கார பெண்ணா பார்த்து செட்டில் ஆயிடுணும்... அது தான் மதி..." என்றபடி காமெடி சமரம் வீசும் சதீஷ், முன் பாதி படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
வில்லன் பெரிய கண்ணு பி.கே எனும் ஜெகபதி பாபு, கசாப்பு கடையிலிருந்து மெடிக்கல் காலேஜ் வரை வளர்கிறார். சரத் லோகித்தாஸ், கோட்டை வீரனாக டேனியல் பாலாஜி ஜெகபதியின் கையாள் ஸ்ரீமன், ‛இன்ஸ் ஹரீஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், காமெடி - தம்பி ராமைய்யா, பேராசிரியர் மாரிமுத்து, வக்கில் சண்முகராஜன், வைஷாலியாக வரும் புதுமுகம், நீதிபதியாக வரும் அண்ணி மாளவிகா... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
பிரவின் கே.எல்.லின் கத்திரி விஜய் படம் என பயந்து பயந்து கத்தரித்திருப்பதால் தானோ என்னவோ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 50 நிமிட (168.33 நிமிடம்) படமாக நீள்....கிறது. பாவம்!
எம்.சுகுமார் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ஒவியப்பதிவு. சந்தோஷ் நாராயணனின் இசையில் "பட்டையைக் கிளப்பு, குட்டையைக் குழப்பு......", "மஞ்சள் மேகம் என் மஞ்சள் மேகம்.." , "அழகிய சூடான பூவே..." உள்ளிட்ட பாடல் காட்சிகளும் பின்னணி இசையும் சிறப்பாய் செவிசாய்க்க வைக்கின்றன.
இயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில், கிளாஸ் ரூம்ல வச்சு குழந்தை எப்படி பிறக்கும்னு பச்சை தமிழ்ல சொல்லு என மெடிக்கல் கல்லூரி மாணவி கீர்த்தியிடம் பேராசிரியர் மாரிமுத்து கேட்பதும், அதையே விஜய், புதுக்கல்யாணம் ஆனவர் மகளிடம் கேட்க சொல்லி விஜய் போன் போட்டு கொடுத்து கலங்கடிப்பதும் என்ன தான் ஹீரோயிசத்திற்காக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது... என்றாலும் படு விரசமாக இருக்கிறது.
அதே மாதிரி கீர்த்தியின் அக்கா புருஷன் ஹரீஷ் உத்தமன், அயோக்கியராகவே இருப்பது... அவரை ஆம்பளையே இல்லை... என அவர் மனைவியே சொல்வது உள்ளிட்ட சீன்களிலும் தம்பி ராமையாவுடனான விஜய்யின் காமெடி சீன்களிலும் ரசிகன் ரொம்பவே நெளிகிறான். அதே மாதிரி இன்கம்டாக்ஸ் ரெய்டு அதிகாரியாக விஜய் அவதாரம் எடுப்பதெல்லாம் ரொம்ப ஓல்டு மாடல் என்பதை இயக்குனர் பரதனிடம் யாராவது சொல்லியிருக்கலாம்.
அவ்வாறு சொல்லாதது உள்ளிட்ட குறைகளை தவிர்த்து விட்டு, "ஒருத்தன் டைமிங்கை மட்டும் சரியா கிப் அப பண்ணிட்டான்னா அவன் தனக்கு டைம் சரியில்லைன்னு சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது", "நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை பண்ணிட்டு சாகறதும் அதுக்கு காரணமானவங்க சந்தோஷமாதிரியறுதும், இன்னைக்கு சர்வ சாதாரணமா அலைவதும் சகஜமா அயிடுச்சுல்ல...", "இன்னைக்கு யாருகிட்டேயும் இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... அது சொன்ன சொல்ல காப்பாத்துறது...","சேமிச்ச உணவு பழசு, பிரிட்ஜ்ல வச்சு சாப்பிடற மாதிரி... வேட்டையாடி சாப்பிடுறது தான் பிரஷ்ஷா இருக்கும்..." என்பது உள்ளிட்ட "பன்ச் " டயலாக்குகள் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தலாம்!
ஆக மொத்தத்தில், "பைரவா - சற்றே குறைவா" தெரியுது!