ஏற்கனவே வெளியான படங்களில் தலைப்புகளில் மீண்டும் படம் தயாரிப்பது இப்போதெல்லாம் ஃபேஷனாகவே மாறி வருகிறது. இந்த வரிசையில் கதாநாயகன் என்ற படமும் சேரவிருக்கிறது. 1988-ஆம் ஆண்டு முக்தா சீனிவாசனின் தயாரிப்பு இயக்கத்தில் பாண்டிராஜன், ரேகா நடித்து வெளியான படம் கதாநாயகன். வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பிய பாண்டியராஜன் கள்ளத்தோணியில் ஏறி துபாய்க்கு கிளம்புவார். அவரை துபாய் என்று பொய் சொல்லி கேரளாவில் இறக்கிவிட்டு சென்றுவிடுவார்கள். நகைச்சுவையான கதை அம்சம் கொண்ட கதாநாயகன் என்ற அந்தப் படத்தின் பெயர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாகியுள்ளது.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் மூலம் தயாரிப்பில் இறங்கி வெற்றி கண்டவர் நடிகர் விஷ்ணு விஷால்! எழில் இயக்கிய இந்தப்படம் 50 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து தனது தயாரிப்பில் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் விஷ்ணுவிஷால். இந்த படத்தை முருகானந்தம் இயக்குகிறார்.
இந்த படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக.... கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. பெயர் வைக்காமல் துவங்கப்பட்ட இப்படத்திற்கு இப்போது 'கதாநாயகன்' என்று பெயர் சூட்டியுள்ளார் விஷ்ணு விஷால்!