த்ரிஷா நாயகியாக நடித்துள்ள 'நாயகி' படத்தை அவருடைய மேனேஜரான கிரிதர் என்பவர் தயாரித்துள்ளார். கோவி இயக்கியுள்ள இந்தப் படத்தை இந்த மாதம் தமிழ், தெலுங்கில் வெளியிடும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர் இறங்கியுள்ளார். பட வெளியீட்டிற்கு முன்னதாக படம் பற்றிய பிரமோஷன்களைச் செய்தால் நன்றாக இருக்கும் என அவர் த்ரிஷாவைத் தொடர்பு கொண்டாராம். ஆனால், த்ரிஷா படத்தின் எந்த பிரமோஷனுக்கும் வர மறுக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு தரப்பிலிருந்து கசிய விட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. படம் முழுவதுமே த்ரிஷாவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அப்படியிருக்க அவர் வர மறுப்பதேன் என தயாரிப்புத் தரப்பிலி நிறையவே குழம்பிப் போயிருக்கிறார்களாம். தெலுங்கில் தற்போது பெரிய மார்க்கெட் எதுவும் இல்லாத த்ரிஷா, இந்தப் படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொண்டால் அது அவருக்கும் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
ஆனாலும், த்ரிஷா தன் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்கிறார்கள். தன் படங்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை உடனுக்குடன் டிவிட்டரில் பகிரும் த்ரிஷா 'நாயகி' படம் குறித்த எந்த செய்திகளையும் சமீப காலமாக பகிராமலேயே இருக்கிறார். த்ரிஷா பிரமோஷனுக்கு வராததன் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்கிறது டோலிவுட் வட்டாரம்.