Latest News

சுல்தான் (ஹிந்தி)




‛பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு பிறகு சல்மானின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகி இருக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் தான் ‛சுல்தான்'. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...

கதைப்படி, சுல்தான் அலி கான் எனும் சல்மான்கான், வாழ்க்கையில் பெரிதாக எந்த குறிக்கோளும் இன்றி, டிஷ் டிவி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். ஒருநாள் ஆர்பா எனும் மல்யுத்த வீராங்கனையான அனுஷ்கா சர்மாவை பார்த்துவிட்டு, அந்தநிமிடமே அவரை காதல் கொள்கிறார் சுல்தான். ஆர்பாவிடம் சுல்தான் காதலை சொல்ல, சிறந்த மல்யுத்த வீராங்கனையாக வர வேண்டும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு வாழும் ஆர்பா, சுல்தானின் காதலை நிராகரிக்கிறார்.

இதையடுத்து சுல்தான், மல்யுத்த வீரராக களமிறங்கி இந்தியாவிற்காக நிறைய பதக்கங்கள் பெற்று தருகிறார். ஆராவும், சுல்தானின் காதலை ஏற்க இருவருக்கும் திருமணமும் நடைபெறுகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்க, ஒருக்கட்டத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது, சுல்தானும் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறார். எதற்காக ஆரா-சுல்தான் பிரிந்தனர்?, சுல்தான் ஏன் மல்யுத்தத்தை கைவிட்டார்?, அதன்பின்னர் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன?, இருவரும் மீண்டும் இணைந்தனரா, சுல்தான் மல்யுத்தத்தை தொடர்ந்தாரா..? உள்ளிட்ட பல வினாக்களுக்கு விடையறிய கண்டிப்பாக தியேட்டரில் போய் தான் படம் பார்க்க வேண்டும்.

பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு பிறகு சல்மான் மீண்டும் ஒரு அழுத்தமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் நிஜ மல்யுத்த வீரராகவே வாழ்ந்திருக்கிறார் சல்மான். மல்யுத்தத்திற்காக தனது உடற்கட்டை பிட்டாக மாற்ற அவர் செய்யும் பயிற்சிகள் உட்பட அனைத்தும் சூப்பர்.

அனுஷ்கா சர்மாவும், தான் சல்மானுக்கு சளைத்தவள் அல்ல என்று நிரூப்பித்திருக்கிறார். மல்யுத்த களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம் வாவ் சொல்ல வைக்கிறது.

சல்மான், அனுஷ்கா போன்றே அமித் சாத், ரன்தீப் ஹூடா ஆகியோரும் தங்கள் ரோலை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மேரி பிரதர் கி துல்கன், கண்டி படங்களின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், சுல்தான் படத்தை இயக்கியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம், இயக்குநர் அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் முதல்பாதி நல்ல கலகலப்பாக என்டர்டெயின்ட்மென்ட்டாக செல்கிறது. அதேசமயம் பின்பாதி சண்டைக்காட்சி உள்ளிட்டவைகளுடன் உணர்வுப்பூர்வமாக நகருகிறது. அலி அப்பாஸ் ஜாபருக்கு பக்கபலமாக படத்தின் அர்துரின் ஒளிப்பதிவும், அதற்கு துணையாக ரமேஷ்வர் பகத்தின் படத்தொகுப்பும் பக்காவாக பொருந்தியிருக்கிறது. விஷால் சேகரின் இசையில் ‛பேபி கோ பாஸ் பசந்த்..., ஜக் கூமியா... போன்ற பாடல்களும் இதம் சேர்க்கின்றன. இதனால் ‛சுல்தான்' அனைவரும் பார்க்கும் படமாக, ரம்ஜான் விருந்தாக வெளிவந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.


Back to Top

Recent Post

Gallery