சிவன் கொண்ட மலை என்ற
ஊரின் மலை மீது மர்ம
பங்களா ஒன்று இருக்கிறது. பேய்
இருப்பதால் அந்த ஊர் மக்கள்
யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே
பயப்படுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர்
மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து
வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு
வேனுக்கு தவணை கட்டாததால் கடன்
கொடுத்த சேட்டு, அந்த வேனை
எடுத்துச் சென்றுவிடுகிறார். இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட,
சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு
வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி
சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி
விடுகிறாள்.
இதனால்
கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க
வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை
தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள்.
அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும்,
இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.
இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு
தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவன் என்று நினைத்து இவர்களை
சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர்,
சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும்
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை
பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே
புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.
சந்தானத்தை
நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான
நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை
நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் பலே திட்டம் ஒன்றை
போடுகிறார். அதன்படி, சந்தானத்திற்கு, சனாயாவை திருமணம் செய்து
கொடுப்பதாக நம்ப வைத்து, சிவன்
கொண்ட மலையில் இருக்கும் பங்களாவுக்கு
அழைத்துச் சென்று அவரை கொலை
திட்டம் போடுகிறார்கள்.
அதன்படி,
நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த
பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே,
பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின்
திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய்
இவர்களை ஆட்டுவித்ததா? என்பதை நகைச்சுவையுடன் திகில்
கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சந்தானம்,
முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில்
ஹீரோவுக்குண்டான தகுதியில் கூடியிருக்கிறார். குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகள்
ஆகியவற்றை ஒரு மாஸ் ஹீரோவுக்கு
இணையாக செய்து காட்டியிருக்கிறார். இவருடைய
தோற்றமும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. படத்தில்,
ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் கவுண்டர்
வசனங்கள் திகில் படம் என்பதையும்
தாண்டி காமெடி சரவெடியாக வெடித்திருக்கிறது.
நாயகி சனாயா புதுமுகம் என்றாலும்,
நடிப்பில் அது தெரியவில்லை. அவரது
கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சேட்டு பெண் என்ற கதாபாத்திரத்திற்கு
கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க சந்தானத்துடன்
பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும்
லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும்
காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல்
சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
சேட்டுவாக
வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு
பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே
செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன்,
சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது
நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது. படத்தின்
இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும்
காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.
சந்தானத்துக்கு
அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு
இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம்
அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.
சின்னத்திரையில்
வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில்
பல படங்களை கிண்டல், கேலி
செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை
படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார்.
குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை
விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம்.
அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
சந்தானத்தை
மாஸ் ஹீரோவாக காட்டும் வகையில்
ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ்
சண்டைக்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காமெடி படத்திலும் திகில்
கலந்து ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள் சூப்பர்.
பின்னணி இசையிலும் திகிலூட்டியிருக்கிறார். தீபக் குமார் பதியின்
ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. திகிலூட்டும் காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள்
நம்மை பயமுறுத்தியிருக்கிறது.
மொத்தத்தில்
‘தில்லுக்கு துட்டு’ த்ரில்லான ஹிட்டு.